நீடாமங்கலத்தில், தடைசெய்யப்பட்ட ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது

நீடாமங்கலத்தில் தடை செய்யப்பட்ட ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-15 16:15 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அப்பாவு பத்தர் சந்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஹிம்ராஜ் மகன் கபூர்ராம் (வயது 34) என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குமணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

மத்திய மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், தஞ்சை சரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் கடையினை சோதனை செய்தனர்.

அப்போது பீடிகட்டுகள் 98 பாக்கெட், ஹான்ஸ் 60 பாக்கெட், குட்கா 65 பாக்கெட், வி1 குட்கா 70 பாக்கெட், கூல்லீப் 7 பாக்கெட் ஆகியவை இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபூர்ராம் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்