கோவையில் 389 பேருக்கு கொரோனா தொற்று - 5 பேர் பேலி

கோவையில் நேற்று புதிதாக 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 5 பேர் பலியாகினர்.

Update: 2020-10-15 16:30 GMT
கோவை,

கோவையில் கடந்த 2 வாரங்களாக தினமும் கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை 400-க்கு கீழ் உள்ளது. கோவையில் நேற்று பீளமேடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி, காரமடை சூலூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,315 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது மற்றும் 77 வயது முதியவர்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண், 67 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண் ஆகிய 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507-ஆக அதிகரித்து உள்ளது.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றில் சிகிச்சை பெற்று வந்த 452 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 33,105 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,703 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அன்சாரி வீதியில் 71 வயது மூதாட்டி, ஆர்.எஸ்.புரத்தில் 70 வயது முதியவர், டி.கோட்டாம்பட்டியில் 29 வயது நபர், சூளேஸ்வரன்பட்டியில் 28 வயது நபர், 49 வயது நபர், 9 வயது சிறுமி, அம்பராம்பாளையத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி, 66 வயது முதியவர், சுந்தரம் லே அவுட்டில் 57 வயது நபர், கொங்கநாட்டன்புதூரில் 44 வயது நபர், புளியம்பட்டியில் 33 வயது நபர் மற்றும் ஆனைமலையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்