உடன்குடி துணை மின் நிலையத்தில் முககவசம் அணியாத அதிகாரி-ஊழியர்களுக்கு அபராதம்

உடன்குடி துணை மின் நிலையத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முககவசம் அணியாமல் இருந்த அதிகாரி மற்றும் 6 ஊழியர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

Update: 2020-10-15 19:28 GMT
உடன்குடி,

உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பெரும்பாலான பொது மக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடமாடி வருவதாக புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் உடன்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ஆழ்வார் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் உடன்குடி துணை மின் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அபராதம் விதிப்பு

இதில் அங்கு முககவசம் அணியாமல் பணியாற்றிய மின்வாரிய அதிகாரி மற்றும் 6 ஊழியர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மின்கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களிடம் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று மின் கட்டண வசூலிப்பாளர்கள் கூறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்வாரிய வளாகத்தில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின் ஊழியர்களிடம் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து சுகாதார துறையினர் மேல பஜாரில் முக கவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்