காங்கிரஸ் வேட்பாளர் குசுமா ரவி மீது வழக்கு: பா.ஜனதா அரசு கோழைத்தனமான அரசியல் செய்கிறது டி.கே.சிவக்குமார் கடும் தாக்கு

காங்கிரஸ் வேட்பளர் குசுமா ரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பா.ஜனதா அரசு கோழைத்தனமான அரசியலை செய்கிறது என்று டி.கே.சிவக்குமார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Update: 2020-10-15 22:10 GMT
பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட குசுமா ரவி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் மீது பா.ஜனதா அரசு பொய் வழக்கை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆளும் பா.ஜனதா கீழ்த்தரமான அரசியலை செய்கிறது. இத்தகைய மோசமான அரசியலை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. ஏற்கனவே மனம் நொந்துபோய் உள்ள ஒரு பெண் மீது வழக்குகளை போடுவது நியாயமா?. ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் மனு தாக்கல் செய்ய, எங்களுக்கு காலை 11.30 முதல் 12.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

வேட்பாளர் குசுமா ரவி, நான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் தேர்தல் அலுவலகத்திற்கு வந்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை குசுமா ரவி கீழே தள்ளிவிட்டுள்ளதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குசுமா ரவி மனு தாக்கல் செய்தபோது, நானும், சித்தராமையாவும் அருகில் இருந்தோம். எங்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர்களின் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தி இரும்பு தடுப்புகளை தாண்டி வரவில்லையா?.

சந்தேகம் இல்லை

துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரி ஆகியோர் விதிமுறைகளை மீறி எதுவரை வந்தனர் என்பதற்கு ஊடகங்களில் வெளிவந்த வீடியோக்களே சாட்சி. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், குசுமா ரவி மீது மட்டும் வழக்கு போட்டது ஏன்?. இது பா.ஜனதா அரசு உள்நோக்கத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. குசுமா ஜாமீன் பெறுவார். வழக்கை கண்டு பயப்பட மாட்டோம். காங்கிரஸ் தொண்டர்களை மிரட்ட முடியாது.

எங்கள் கட்சி வேட்பாளர் மீது பொய் வழக்கு போட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும். நாங்கள் வளர்த்த நபரை தான் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தேர்தல் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை பறக்கும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாங்கள் பெற்றுள்ளோம். கர்நாடக அரசு கோழைத்தனமான அரசியலை செய்கிறது. மாநில அரசின் கைப்பாவையாக நகர போலீஸ் கமிஷனர் செயல்படுகிறார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்