மாம்பலம் ரெயில் நிலையத்தில் 40 பவுன் நகை பையை தவறவிட்ட பயணி ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மீட்டு ஒப்படைத்தனர்

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 40 பவுன் நகை பையை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

Update: 2020-10-15 23:08 GMT
சென்னை,

ஊரடங்கால் வழக்கமான ரெயில் சேவைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், மாம்பலத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, 2 நிமிடத்துக்கு பிறகு எழும்பூருக்கு புறப்பட்டது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் சென்ற பின்னர், ஒரு பை மட்டும் கேட்பாரின்றி நடைமேடை எண் 4-ல் கிடந்தது.

இதைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த மாம்பலம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஒருவர், அதை மீட்டு, அதனை திறந்து பார்த்தார்.

16 லட்சம் மதிப்பிலான நகை

அதில் மோதிரம், கம்மல், வளையல், நெக்லஸ், செயின் என ரூ.16 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகை இருந்தது. இதையடுத்து அந்த பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில், அந்த பையை தவறவிட்டவர் சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த சுல்தான் பஷீர் பானு (வயது 49) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் வரவழைத்து அந்த பையை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். ரெயில் நிலையத்தில் தவறவிட்ட பையை 40 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த மாம்பலம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு அந்த பெண் நன்றி தெரிவித்தார்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக பொது மக்கள் ரெயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டும் ரெயில் நிலையத்துக்கு போலீசார் அனுமதிப்பதால் பயணி தவறவிட்ட நகை பை போலீசார் கையில் உடனடியாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்