திருச்சியில் இருந்து 6 மாதங்களுக்குப்பின் இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடுகிறது

6 மாதங்களுக்கு பின், திருச்சியில் இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடுகிறது.

Update: 2020-10-16 06:21 GMT
திருச்சி,

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ரெயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் தனியார் ஆம்னி பஸ் நிலையம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களுக்கு விடிய, விடிய ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பஸ், ரெயில் போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டன.

கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதிக்கப்பட்டன. அதாவது, பஸ்சில் 50 சதவீத பயணிகளையே ஏற்ற வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, பஸ்கள் ஓடத்தொடங்கின. அதேபோல தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், பஸ்கள் ஓட்டப்படாத காலக்கட்டத்தில் கட்ட வேண்டிய சாலைவரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பஸ்களை அதன் உரிமையாளர்கள் இயக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊரடங்கால், கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டன.

பஸ்களில் பேட்டரி சார்ஜ் சரியாக உள்ளதா? என்றும், பஸ்கள் பிரச்சினையின்றி ஸ்டார்ட் ஆகிறதா? என்றும், ஆயில் போட வேண்டிய இடத்திற்கு ஆயில் போட்டும் பஸ்களை ஆயத்தப்படுத்தும் பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆம்னி பஸ்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மாநில அரசின் விதிகளை பின்பற்றி 6 மாதங்களுக்கு பின் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் கண்டிப்பாக முக கவசங்கள் அணிந்தால் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஆம்னி பஸ்களில் பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கையை பொருத்துதான் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படும். டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்