புனேயில் பலத்த மழை வெள்ள சேதத்தை அஜித்பவார் பார்வையிட்டார்

புனேயில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை துணை முதல்- மந்திரி அஜித்பவார் பார்வையிட்டார்.

Update: 2020-10-16 21:23 GMT
புனே,

புனேயில் 2 நாட்களாக இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் தாழ்வான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் புனேயில் பொதுமக்கிளன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புனேயில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வழக்கு பதிவு

வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புனே மாவட்டத்தில் பெய்த மழையினால் பயிர்கள் சேதமடைந்து உள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழக்கப்படும்.

மழையின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் பண்டர்பூர், சோலாப்பூர் மற்றும் பாரமதி ஆகிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டர்பூரில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. புனே நகரில் ஏற்பட்ட மழை சேதத்திற்கு நிவாரணத்தொகை வழங்க மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது.

இ்வ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்