டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்தது ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சி

டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்ததாக ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Update: 2020-10-18 03:23 GMT
தேனி,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து, இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்தார்.

இவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான நாராயணமூர்த்தியின் மகன் ஆவார். மாணவரின் தாய் பரமேஸ்வரி, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை பார்ப்பதுடன், தையல் தொழிலாளியாகவும் உள்ளார். அக்காள் சர்மிளாதேவி பி.எஸ்சி. படித்துவிட்டு, பி.எட். படிப்பும், தம்பி தீபன் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மாணவர் ஜீவித்குமார் நேற்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கலெக்டர், மாணவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பின்னர் மாணவர் ஜீவித்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் வழியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ மூலம் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கல்வி நிதியாக வழங் கப்படுகிறது. நான் 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 493 மதிப்பெண் பெற்றேன். இதையடுத்து திண்டுக்கல்லில் ‘தினத்தந்தி’ சார்பில் நடந்த விழாவில் எனக்கு ரூ.10 ஆயிரம் கல்வி நிதியாக கிடைத்தது. அது டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்த எனக்கு ஊக்கம் அளித்தது. பின்னர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 548 மதிப்பெண்கள் பெற்றேன். கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் 198 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனாலும் ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்றால் என்னால் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன், ஆங்கில ஆசிரியர் அருள்முருகன் ஆகியோர் உதவியால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்று நம்பினேன். அதன்படி தற்போது 664 மதிப்பெண்கள் எடுத்துவிட்டேன். டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என்பதும், என்னை போன்ற அரசு பள்ளி மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவ வேண்டும் என்பதும் எனது ஆசை. எனக்கு சென்னை அரசு மருத்துவ கல்லூரி அல்லது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவும், எனது மருத்துவ படிப்புக்கும் அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்