பெரம்பலூரில் பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மின்வாரிய அதிகாரி உடல் நசுங்கி பலி - உறவினர் படுகாயம்

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் மின்வாரிய அதிகாரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர் படுகாயமடைந்தார்.

Update: 2020-10-18 11:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 36). இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சென்னையில் உதவி மின்பொறியாளராக பணிபுரிந்து வந்த ராமதாஸ் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்து தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ராமதாஸ் பெரம்பலூருக்கு வந்து ரோவர் வளைவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அவரது உறவினரான செட்டிகுளம் வடக்கு மின்சார வாரியத்தில் உதவி மின்பொறியாளராக பணிபுரியும் பெரியம்மாபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபு (36) என்பவர், பணி நிமித்தமாக பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு செல்வதற்காக வந்தார்.

ரோவர் வளைவில் நின்று கொண்டிருந்த ராமதாசை கண்டதும், பிரபு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் அருகே இருந்த டீக்கடையில் டீ குடித்து விட்டு ஒன்றாக புறப்பட்டுள்ளனர். அப்போது ராமதாஸ் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் பிரபு அமர்ந்திருந்தார்.

பாலக்கரை ரவுண்டானாவில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் ராமதாஸ் சிக்கினார். சக்கரங்கள் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபு படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் ராமதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பிரபுக்கு ரஞ்சனி என்ற மனைவியும், 2 வயதில் மோகனபிரபஞ்சன் என்ற மகனும் உள்ளனர்.

விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காரையூரை சேர்ந்த பிரகாசை (54) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்