புதுவையில் விடிய விடிய பலத்த மழை

புதுவையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

Update: 2020-10-18 22:08 GMT
புதுச்சேரி,

மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுவையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் விட்டுவிட்டு நேற்று காலை வரை மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8.30 மணி வரை 2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

இந்த பலத்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், பாவாணர் நகர், தேங்காய்திட்டு ஆதிபராசக்தி நகர், தட்டாஞ்சாவடி, புஸ்சி வீதி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதி உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை நீடராஜப்பையர் வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தகவல் அறிந்த உடன் வனத்துறை, நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அங்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்