திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதில் மரக்கிளை முறிந்து விழுந்ததில், வாகனங்கள் சேதமடைந்தன.

Update: 2020-10-18 22:25 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. அதே போல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அகரம் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக கடம்பத்தூர் பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அகரம் பகுதியில் பழமையான புளியமரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளையானது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான தேவராஜ் (வயது 65) என்பவர் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிரைலர் மீதும், அதன் அருகே ஆட்டோ டிரைவரான சீனிவாசன் என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீதும் விழுந்தது.

இதில் 2 வாகனங்களும் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் மரக்கிளை முறிந்து விழுந்ததில், சாலையோரம் இருந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக கடம்பத்தூர் மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடம்பத்தூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து சாலையில் முறிந்து விழுந்த பெரிய புளியமரக்கிளையை அப்புறப்படுத்தினர்.

இதன் காரணமாக அப்பகுதி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்