துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிக்கு காங்கேயத்தை சேர்ந்தவர் தேர்வு

துபாயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு காங்கேயத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-10-19 03:05 GMT
காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்தவர் லட்மணன் என்ற லட்சுமணகாந்தன் (வயது 47). இவர் தனது 5 வயதில் இளம்பிள்ளைவாதம் நோய் தாக்கியதில் இடது கை மற்றும் இடது கால் பாதிப்படைந்தவர். இவருடைய மனைவி பானுமதி. இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நவீன் பாலாஜி என்ற மகன் உள்ளார்.

லட்சுமணகாந்தனுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அவர் பார்க்கச் சென்றுவிடுவார். மேலும் கிரிக்கெட் விளையாடியும் வருகிறார்.

இதற்கிடையே தனது மகனுக்கு காங்கேயத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து, கிரிக்கெட் ஆர்வலர்கள் மூலம் பயிற்சி அளித்து வந்தார். அப்போது சாதாரணமான வீரர்களுடன் மாற்றுத்திறனாளியான லட்சுமணகாந்தனும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இதனைக் கண்ட அரியலூர் கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கடேஷ் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், அடுத்த மாதம் (நவம்பர்) துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடுவதற்கு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு, தேர்வாகியுள்ளார். இதன் மூலம், துபாயில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டிகளில், தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்காக லட்சுமணகாந்தன் விளையாடவுள்ளார்.

இது குறித்து லட்சுமணகாந்தன் கூறியபோது, “எனது மகனுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியில் எனது திறமையை வெளிப்படுத்துவேன்” என்றார்.

இந்த நிலையில் துபாய் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இவருக்கு தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என இப்பகுதி கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்