நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: 3 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் கர்நாடக அரசு உத்தரவு

நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-19 22:29 GMT
பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் நடத்தியவர் மன்சூர்கான். இவர், தங்க நகை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த ரூ.2 ஆயிரம் கோடியை மோசடி செய்திருந்தார். இதையடுத்து, மன்சூர்கான் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மன்சூர்கான் நகைக்கடைகளில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார்.

இதுதவிர மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஹேமந்த் நிம்பால்கர், அஜய் ஹிலோரி உள்பட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு, மன்சூர்கான் நகைக்கடைகளில் நடந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அரசும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஹேமந்த் நிம்பால்கர், அஜய் ஹிலோரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவுரி சங்கர் உள்பட 28 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 நாட்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

3 பேர் பணி இடைநீக்கம்

இந்த நிலையில், மன்சூர்கான் நகைக்கடைகளில் நடந்த மோசடியில் தொடர்பு இருப்பதுடன், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகளான ஸ்ரீதர், ரமேஷ், கவுரி சங்கர் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் மன்சூர்கான் நடைக்கடையில் முறைகேடுகள் நடப்பது பற்றி அறிந்திருந்ததுடன், அவரிடம் லஞ்சம் பெற்று விட்டு கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், குற்றப்பத்திரிகையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஹேமந்த் நிம்பால்கர், அஜய் ஹிலோரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்யாமலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் மற்ற 3 போலீஸ் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்