தலை, மூக்கு பகுதியில் காயங்கள் இருந்ததால் தகனம் செய்ய முயன்ற மூதாட்டி உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை

தலை, மூக்கு பகுதியில் காயங்களுடன் சுடுகாட்டில் தகனம் செய்ய முயன்ற மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், மகன், பேரன்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிய டாக்டர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-10-19 23:11 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை அருள்முருகன் நகரில் உள்ள சுடுகாட்டில் மூதாட்டி ஒருவரின் உடல் ரகசியமாக தகனம் செய்யப்படுவதாகவும், மூதாட்டியின் தலையில் காயங்கள் இருப்பதாகவும் பழைய பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் கீழ்கட்டளை சுடுகாட்டுக்கு விரைந்து சென்று அங்கு தகனம் செய்ய தயாராக இருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றினார்கள். விசாரணையில் அவர், மடிப்பாக்கம் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது 82) என தெரியவந்தது. அவரது உடலை பரிசோதித்த போது தலையில் ஆழமான வெட்டுக்காயம், மூக்கு பகுதியில் சிறு சிறு காயங்கள் இருந்ததை கண்டனர்.

கட்டிலில் இருந்து விழுந்தார்

இதையடுத்து தடயவியல் கூடுதல் இயக்குனர் சோபியா, விரைந்து வந்து மூதாட்டி உடலை ஆய்வு செய்தார். பின்னர் மூதாட்டியின் மரணம் சந்தேக மரணம் என உறுதி செய்தார். இதையடுத்து போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இறந்துபோன மூதாட்டி சரஸ்வதியின் மகன் ரவி (60) என்பவரிடம் போலீசார் விசாரித்தபோது, “காலையில் சரஸ்வதி அறைக்கு சென்று பார்த்தபோது கட்டிலில் இருந்த கீழே விழுந்துபேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். பழைய பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து செவிலியர்களை அழைத்து வந்து பரிசோதித்தோம். அப்போது எனது தாய் சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறுதிச்சடங்கு செய்ய மருத்துவ சான்று தேவைப்பட்டது. தெரிந்த டாக்டர் ராஜீவ் என்பவர் மூலமாக மாரடைப்பால் இறந்ததாக சான்று பெற்று தகனம் செய்ய முயன்றதாக” கூறினார்.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சரஸ்வதியின் மகன் ரவி, பேரன்கள் ஜெகதீஷ், லோகேஷ் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர் ராஜீவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்