ராணிப்பேட்டை மாவட்டத்தில், பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் இணைய வழியில் வழங்கப்படும் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் இணைய வழியில் வழங்கப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-20 06:00 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு சில்லரை விற்பனைக்கு ஏற்கனவே நிரந்தர உரிமம் பெற்று இருப்பவர்களை தவிர தற்காலிக உரிமம் பெற உள்ளவர்கள் இணைய வழியில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிற 1-ந் தேதி முதல் தற்காலிக உரிமங்கள் இணைய வழியிலேயே வழங்கப்படும்.

மேற்கண்ட உரிமங்கள் கோவிட்-19 தொற்று காரணமாக இவ்வாண்டு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் ஏற்கனவே இருந்த பழைய தேதிகள் முறையே கடைபிடிக்கப்படும். இதற்காக ஆங்காங்கே இயங்கி வரும் அரசு இ-சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், முகவரிக்கான ஏதாவது ஒரு சான்று ஆவணம், வியாபாரம் நடத்தும் கடைக்கான வரி ரசீது ஆகிய சான்று ஆவணங்களை கொண்டு சென்று அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம். 23-ந் தேதிக்கு பின்னர் பட்டாசு சில்லரை விற்பனை காண தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்