போலீசாரின் அனுமதியுடன் வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்திய எங்கள் மீது வழக்கு தொடருவதா? மூத்த மகள் வித்யாராணி ஆவேசம்

போலீசாரின் அனுமதியுடன் தந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்திய எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு தொடருவதா? என வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி ஆவேசமாக கூறினார்.

Update: 2020-10-21 09:09 GMT
கிருஷ்ணகிரி,

தமிழக, கர்நாடக போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பனை, தமிழக அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவரது உடல் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி வீரப்பனின் 16-வது ஆண்டு நினைவு தினம் அவரது குடும்பத்தினரால் அனுசரிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி வீரப்பனின் சமாதியில் கூடியதாகவும், அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி கொளத்தூர் போலீசார், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மூத்த மகள் வித்யாராணி, இளையமகள் பிரபாவதி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பா.ஜனதா இளைஞரணி மாநில துணை தலைவரும், வீரப்பனின் மூத்த மகளுமான வித்யாராணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக இடைவெளியுடன் எனது தந்தையின் சமாதியில் நான், குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினேன். ஆனால் போலீசாரின் உத்தரவை மீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது. போலீசாரின் அனுமதியின்பேரில், அஞ்சலி செலுத்திய எங்கள் மீது வழக்கு தொடருவதா?. போலீசாரின் இந்த நடவடிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இதில் அதிகாரிகள் தங்களது பணியை சரியாக செய்யாமல் வேண்டுமென்றே எங்கள் மீது குற்றம் சாட்டி உள்ளனர். பா.ஜனதாவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால், என் மீதும், நான் சார்ந்துள்ள கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்