ஆரணி, வந்தவாசி, பெரணமல்லூரில் குடிமராமத்து பணிகளை நீர்வள மேம்பாட்டுத்துறை தலைவர் ஆய்வு

ஆரணி, வந்தவாசி மற்றும் பெரணமல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை தமிழக நீர்வள மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.சத்யகோபால் ஆய்வு செய்தார்.

Update: 2020-10-21 13:14 GMT
ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ரூ.47 லட்சத்து 25 ஆயிரத்தில் குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணியை தமிழக நீர்வள மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.சத்யகோபால் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 59 ஏரி பணிகள் ரூ.31 கோடியே 2 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. தமிழகம் முழுவதும் சுமார் ரூ.299 கோடி அளவில் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆரணி தாசில்தார் செந்தில்குமார், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.வி.மூர்த்தி, ஆ.பெ.வெங்கடேசன், பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் சுரேஷ், செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் ராஜகணபதி, முருகேசன், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதேபோன்று வந்தவாசி பகுதியில் உள்ள காவேரிபாக்கம், பிருதூர், காட்டேரி, கிராமங்களில் ரூ.90 லட்சத்தில் நடைபெற்று வரும் ஏரி மராமத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். செய்யாறு உதவி கலெக்டர் விமலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பெரணமல்லூர் ஒன்றியம் ஆயலவாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.29½ லட்சத்தில் அடர்மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பணியை தமிழக நீர்வள மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.சத்யகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, திருவண்ணாமலை கோட்ட செயற்பொறியாளர் (ஊராட்சிகள்) சுந்தரேசன், வந்தவாசி கோட்ட உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், வந்தவாசி தாசில்தார் திருநாவுக்கரசு, சமூக நல பாதுகாப்பு தாசில்தார் நிரஞ்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவிதா, ராஜன்பாபு, ஒன்றிய பொறியாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் செண்பகவல்லி நாராயணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன், கிராம நிர்வாக அலுவலர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்