திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், மடத்துக்குளம், பல்லடத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-21 15:25 GMT
திருப்பூர்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மதியம் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி மோகன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர், ஓட்டுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை சிறப்பு பணியிடங்கள் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்பநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட செயலாளர் முருகதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சதீஷ் குமார் நன்றி கூறினார். கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, அடுத்த மாதம் 25 மற்றும் 26-ந் தேதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்லடத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார், ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்