தேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர் ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றச்சாட்டு

தேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர் என்று ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றம்சாட்டினார்.

Update: 2020-10-21 21:43 GMT
மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் மோதலை அடுத்து பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே நேற்று கட்சியில் இருந்து விலகினார். அவர் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் பற்றி ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அழுக்கு அரசியல்

என் மீது அஞ்சலி தமானியா மானபங்க புகார் கொடுத்தார். இதுகுறித்து அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம், அஞ்சலி தமானியா சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். மேலும் என் மீது வழக்குப்பதிவு செய்த அவர் போலீசாரை அறிவுறுத்தினார். நான் மும்பையில் இல்லாதபோது என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனக்கு எதிராக முறைகேடு புகார்கள் எழுப்பப்பட்டது. அதில் இருந்தும் நான் வெளிவந்தேன். இதுபோன்ற அழுக்கு அரசியலை நான் எனது பா.ஜனதா அரசியல் வரலாற்றில் ஒருபோதும் பார்க்கவில்லை.

அழிக்க முயற்சித்தவர்

நான் 2014-ம் ஆண்டு சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியபோது பா.ஜனதா 123 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன ஆனது?. பா.ஜனதாவுக்கு அனைத்து வளங்கள் இருந்தும் 105 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.

2009-ல் நான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியபோது, தேவேந்திர பட்னாவிசுக்கு சட்டசபையில் 5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அவர் 2-வது வரிசையில் இருக்க நான் அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதிலும் எனக்கு நேர் பின்புறம் இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் தற்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறேன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை வளர்த்த எனது வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்க முயற்சித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். அவர் பா.ஜனதாவில் இருக்கும் வரை எனக்கு நீதி கிடைக்காது என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்