தானே அருகே மின்னல் தாக்கி 25 பேர் காயம் வீடுகள் சேதம்

தானே அருகே மின்னல் தாக்கி 25 பேர் காயமடைந்தனர். வீடுகளும் சேதமடைந்து உள்ளன.

Update: 2020-10-22 22:14 GMT
மும்பை, 

தானே மாவட்டம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் இரவு 7 மணியளவில் சகாப்பூர் தாலுகா, பாலஸ்பாடா பகுதியில் உள்ள உம்பார்மாலி கிராமத்தில் குடியிருப்பு பகுதியை மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் அந்த பகுதியில் வீடு ஒன்று முற்றிலுமாக சேதமடைந்தது. அந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்து உள்ளன. மேலும் மின்னல் தாக்கியதில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 25 பேர் காயமடைந்தனர்.

சிகிச்சை

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு தலைமை அதிகாரி சந்தோஷ் கதம் கூறுகையில், “மின்னல் தாக்கியதில் குறைந்தது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 25 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சகாப்பூர் ஊரக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றாா்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என உதவி கலெக்டர் சிவாஜி பாட்டீல் கூறினார். ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் மின்னல் தாக்கி 25 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்