எழுமலை அருகே, விவசாயி கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

எழுமலை அருகே உள்ள சூலப்புரத்தில் விவசாயி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-23 06:45 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது இதே ஊரை சேர்ந்த விவசாயி செல்லத்துரை(வயது 40) என்பவரை மற்றொரு பிரிவினர் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட செல்லத்துரை குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்தகொலை தொடர்பாக அவரின் மனைவி மலர் கொடுத்த புகாரின் பேரில் எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை ஒரு வாரம் ஆகியும் கைது செய்யப்படாததை கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரியும் சூலப்புரம் கிராம மக்கள் உசிலம்பட்டி-எம்.கல்லுப்பட்டி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்