சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் - நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் இருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

Update: 2020-10-23 22:15 GMT
சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

மேலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அதிகமான பக்தர்கள் சமயபுரம் வருவார்கள். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே அம்மனை தரிசனம் செய்வதற்காக கார், வேன், பஸ்கள் மூலமாக வந்தனர்.

அவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் முடிக்காணிக்கை செய்தும், குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்று கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் முன்புறம் மற்றும் நெறி விளக்கு ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

அதைத்தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் பணியாளர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளில் சானிடைசர் தெளித்த பின்பும், முககவசம் அணிந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

இதேபோல், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில், போஜீஸ்வரர்கோவில் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், நாமக்கல், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். தலையெழுத்தையே மாற்றி அமைக்க கூடிய சர்வ வல்லமை படைத்த ஸ்தலம் என்று போற்றப்படும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும், பரிகார ஸ்தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அவர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்குள் செல்லுமாறு கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமியை பயபக்தியுடன் வணங்கினர். கோவிலுக்கு அதிக அளவில் வரும் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில், சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்