பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

சிங்கம்புணரியில் பேரூராட்சி மற்றும் நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-10-24 05:30 GMT
சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர்புற பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணியம்மை, ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கோரிக்கை மனுவுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் ஜான்முகமதுவிடம் தனித்தனியாக தங்களது மனுவை கொடுத்து வேலை கோரி விண்ணப்பம் செய்தனர்.

விவசாய பணிகள் இல்லாமல் நகர்ப்புறத்தில் வாழ்ந்து வரும் இந்த ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி வளாகத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களில் 10 சதவீதம் பேர் கூட முக கவசம் அணியாமல் வந்திருந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்