3-வது நாளாக நீடித்த தீயணைப்பு பணி வணிக வளாக தீ விபத்தில் 700 கடைகள் எரிந்து நாசம்

மும்பை வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 3-வது நாளாக தீயணைப்பு பணி நீடித்தது. இதில் 700 கடைகள் எரிந்து நாசம் அடைந்தது. மேலும் ரூ.150 கோடி பொருட்கள் சேதம் அடைந்தது.

Update: 2020-10-24 23:55 GMT
மும்பை, 

மும்பை சென்ட்ரல் அருகே நாக்பாடாவில் உள்ள சிட்டி சென்டர் மால் என்ற வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அங்கு சிக்கி இருந்த 300 பேர் மீட்கப்பட்டனர். மேலும் வணிக வளாகத்தையொட்டிய 55 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 5 தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் வணிக வளாகத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு படையினர் நேற்று 3-வது நாளாக போராடினர். நேற்று 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 மெகா டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

700 கடைகள் நாசம்

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த 600 முதல் 700 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் சுமார் ரூ.150 கோடி பொருட்கள் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக தெரியவந்தது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் காரணமாக தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், தற்போது கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. முற்றிலும் தீயை அணைத்த பின்னர் குளிர்விக்கும் பணி தொடர இருப்பதாக தீயணைப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மந்திரி பார்வையிட்டார்

இதற்கிடையே காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

பயங்கர தீ விபத்தினை சுற்றுலாதுறை மந்திரி ஆதித்ய தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்