இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி

இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-10-25 00:11 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகருக்கு (ஆர்.ஆர்.நகர்) வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குசுமா ரவியும், பா.ஜனதா சார்பில் முனிரத்னாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியை கைப்பற்ற 3 கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆர்.ஆர்.நகரில் 25 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் போலீசார், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கொடி அணிவகுப்பு

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்க ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஞானபாரதி, சீனிவாஸ் சர்க்கிள், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கர்நாடக ஆயுதப்படை போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

மேலும் செய்திகள்