திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொல்.திருமாவளவன் மீது பா.ஜனதா மகளிர் அணியினர் புகார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது, பா.ஜனதா மகளிர் அணியினர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2020-10-25 14:00 GMT
திண்டுக்கல்,

பா.ஜனதா மகளிர் அணியின், மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி அரவிந்த் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட தலைவி ஆனந்தி, செயலாளர் சித்ரா, பொதுச்செயலாளர் மோனிகா உள்ளிட்ட மகளிர் அணியினர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தொல்.திருமாவளவன் இந்து பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தி கொச்சையாக பேசி உள்ளார். மேலும் இந்து சாஸ்திரங்களில் அதுபோன்று இருப்பதாக அவதூறான கருத்தை பதிவேற்றி இருக்கிறார். இதுவேண்டுமென்றே ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், மத உணர்வுகளை தூண்டி பொதுஅமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பானவற்றை பரப்புகிறார். அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும், பெண்களின் மாண்பை கொச்சைபடுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.

எனவே, தொல்.திருமாவளவன் மற்றும் சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் நிர்வாகிகள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நத்தம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி ஒன்றிய தலைவி மாரியம்மாள் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதை கண்டித்தும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் சொக்கர், மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன், தெற்கு மண்டல தலைவர் சுதாகர், மாவட்ட பட்டியலின பொதுச்செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்