மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.988 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் மலர்விழி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.988 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வங்கியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.

Update: 2020-10-26 00:34 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் கலெக்டர் மலர்விழி நடத்தினார். இந்த கூட்டத்தில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமாவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு, வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா மற்றும் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் கடன் வழங்குவதற்கான இலக்கை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் வங்கிகள் முடிக்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.988 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.450 கோடி அளவுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிய நேரத்தில்

பயிர் காப்பீடு, பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், தாட்கோ மூலம் வழங்கப்படும் மானிய உதவியுடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கடன் வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவிகளை வழங்கி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் வங்கியாளர்கள் அடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்