பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு: திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி போராட்டம்

பெண்களை இழிவுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, உருவபொம்மையையும் எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-28 04:23 GMT
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பா.ஜ.க. வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மகளிர் அணி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உருவபொம்மை எரிப்பு

போராட்டத்தில் திருமாவளவனை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது திடீரென்று சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் போராட்டம் நடைபெற்ற பகுதியில் திருமாவளவனின் உருவபொம்மையை எரித்தனர். போலீசார் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

நடிகை கவுதமி

போராட்டம் முடிந்து வெளியே வந்த நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருமாவளவன் பேசியதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?. அவர் பேசி இருப்பது வெட்கக்கேடான விஷயம். இதற்காக எல்லோரும் ஒன்றாக நின்று போராட வேண்டும். மனுதர்மத்தில் திருமாவளவன் கூறிய கருத்துகள் எதுவும் இல்லை. அதில் குடும்பம், வீடு, நாடு இவற்றில் பெண்களை மதித்து காப்பாற்றி சந்தோஷமாக வைக்கவேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் அந்த வீடோ, குடும்பமோ, நாடோ அழிந்துபோகும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் அதில் இல்லாததை அரசியல் லாபத்துக்காக திருமாவளவன் பொய்யாக சொல்லியிருக் கிறார்’ என்றார்.

மேலும் செய்திகள்