தேசிய சுகாதார இயக்க ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் ரூ.300 கோடி ஊழல் முதல்-மந்திரிக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்

தேசிய சுகாதார இயக்க ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் ரூ.300 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-10-28 23:37 GMT
மும்பை,

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய சுகாதார இயக்கம் மத்திய அரசின் திட்டமாகும். ஆனால் மாநில அரசால் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய மந்திரிகள் வாக்குறுதி அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் கேட்கப்படுகிறது. ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக பலர் கடன் வாங்கி லஞ்சம் கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக என்னிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது. 3 ஆடியோ ஆதாரத்தை எனது கடிதத்துடன் உங்களுக்கு அனுப்பி வைத்து உள்ளேன்.

இது ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான ஊழல். சுகாதாரத்துறையின் ஒரு திட்டத்தில் மட்டும் இவ்வளவு முறைகேடு என்றால், ஒட்டுமொத்த சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்