4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-10-29 04:34 GMT
திருவாரூர், 

திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டணியின் மாவட்ட தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம், சங்கத்தின் மாநில மாவட்ட செயலாளர் சுவிக்கின்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 அம்ச கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து பிறப்பித்துள்ள ஆணையை அரசு திரும்ப பெற வேண்டும். உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணையை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 வயதாக குறைத்து வெளியிட்டுள்ள ஆணையை உடனே அரசு திரும்ப பெற வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்