தந்தையை தாக்கியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கர்ப்பிணி, தாயுடன் தீக்குளிக்க முயற்சி - தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தந்தையை தாக்கியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கர்ப்பிணி தனது தாயுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2020-10-29 14:45 GMT
தேனி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை சேர்ந்த விக்னேஷ் மனைவி பிரபா (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான இவர், தனது தாய் நாகஜோதியுடன் (58) தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் அருகில் சென்ற அவர்கள் 2 லிட்டர் கேனில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தங்களின் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பிரபா போலீசாரிடம் கூறுகையில், “எங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் அடிக்கடி எங்களிடம் பிரச்சினை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் எனது தந்தை பாண்டியை தாக்கிவிட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மண்எண்ணெய் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயற்சித்தோம்“ என்றார்.

இதையடுத்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தேனி போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தேவதானப்பட்டி போலீசார் அங்கு வந்தனர். கர்ப்பிணி மற்றும் அவருடைய தாய்க்கு உரிய அறிவுரைகள் வழங்கி, தேவதானப்பட்டி போலீசாருடன் அவர்களை அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களிடம் புகார் மனு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்