நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் கூடுதல் பட்டய படிப்புகள் தொடங்கப்படும்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கூடுதல் பட்டய படிப்புகள் தொடங்க கல்வி சார் நிலை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2020-10-30 05:44 GMT
பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 51-வது கல்விசார் நிலை கூட்டம் நேரடி மற்றும் காணொலி காட்சி மூலம் நேற்று காலையில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பல்கலைக்கழகம் அதை சார்ந்த கல்லூரிகளில் கூடுதல் பட்டய படிப்புகள் தொடங்குவதற்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளின் காரணமாக மாணவர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதிகளை வளர்த்து கொள்ளலாம். காலம் மற்றும் தொழில் முன்னேற்றங்களுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பட்டய படிப்புகள் உதவும்.

ஆராய்ச்சியை மேம்படுத்த நமது பல்கலைக்கழகம் மூலம் ரூ.10 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் ஆராய்ச்சி திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இந்த கல்வி ஆண்டில் இணைய வழிக்கல்வியை சிறப்பாக கையாள ஆசிரியர்களுக்கு 7 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 147 பல்கலைக்கழக பேராசிரியர், உறுப்பு கல்லூரியை சேர்ந்த 262 ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இணைய வழி மூலம்

தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி அனைத்து இளங்கலை பாடத்திட்டத்திலும் முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தொழில்முறை ஆங்கில படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தொலைதூர கல்வி இயக்குனரகம் மூலமாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு இணைய வழி மூலமாக தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் பலவேசம் செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்