வனப்பகுதியில் மரங்களை வெட்டிய மர்மநபர்கள்: மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்

கம்பம் சுருளி அருவி அருகே உள்ள வெண்ணியாறு வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தோதகத்தி மரம், ஒரு தேக்கு மரம் என 3 மரங்கள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

Update: 2020-11-02 06:31 GMT
கம்பம்,

கம்பம் சுருளி அருவி அருகே உள்ள வெண்ணியாறு வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தோதகத்தி மரம், ஒரு தேக்கு மரம் என 3 மரங்கள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மரங்களை கைப்பற்றி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.இந்நிலையில் வைகை அணையில் உள்ள வனத்துறை பணியாளர்கள் பயிற்சி மையத்தில் வன குற்றங்களை கண்டறிவதற்காக பயிற்சி பெற்று வரும் ஹெக்சா மற்றும் பிரின்ஸ் ஆகிய 2 மோப்பநாய்கள் மரங்கள் வெட்டப்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த நாய்களின் உதவியுடன் மர்ம நபர்களை தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோப்பநாய்கள் மோப்பம் பிடித்தப்படி அரிசிப்பாறை, மின்நிலையம் வழியாக குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு வரை ஓடி வந்து நின்றது. இதனால் வனத்துறையினர் சந்தேகமடைந்து குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி மற்றும் கூடலூரை சேர்ந்த பழைய வனக்குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ் தலைமையில், கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார், மோப்ப நாய் பயிற்சியாளர்கள் நிவேதா, விவேகானந்தன் மற்றும் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்