வேப்பனப்பள்ளி பகுதியில் 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத நீர் நிலைகள் விவசாயிகள் வேதனை

வேப்பனப்பள்ளி பகுதியில் 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத நீர்நிலைகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2020-11-03 04:48 GMT
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து நெல், மா, வாழை, காய்கறிகள், பப்பாளி, பூக்கள் மற்றும் தென்னை ஆகியவை அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு தமிழத்தின் பல மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் டன் கணக்கில் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் இந்த விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் ஆண்டு தோறும் வரும் பருவமழை மற்றும் மழையால் இங்குள்ள ஏரிகளில் வரும் தண்ணீரை ஆதாரமாக கொண்டு பயன்படுத்தி வந்தனர்.

நிரம்பாத நீர்நிலைகள்

வேப்பனப்பள்ளி பகுதிகளில் உள்ள மார்கண்டேயன் நதிகள் பல கிளைகளாக பிரிந்து வேப்பனப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்தது. மேலும் வேப்பனப்பள்ளி ஆறு மற்றும் திம்மக்கா ஏரி, ஆந்திர ஏரி மற்றும் இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி 10 ஆண்டுகள் ஆகிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியமால் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயம் குறைகிறது

நாங்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். பருவ மழையை மட்டும் நம்பியே இங்கு விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் ஆண்டும் தோறும் பருவ மழை பெய்தால் கூட இங்கு உள்ள ஏரிகள் குளங்களில் மற்றும் ஆறுகளில் தண்ணீர் வருவதில்லை. மேலும் தண்ணீரும் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் நிற்பதில்லை.

இதனால் ஆழ்துளை கிணறுகளை நம்பி இப்போது விவசாயம் செய்து வருகிறோம். மழை இல்லாததால் போதிய விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் விவசாயத்திற்கு ஆண்டுதோறும் தண்ணிர் பற்றாகுறை ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு விவசாயம் குறைந்த கொண்டே வருகிறது“ என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆறுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இல்லமால் வறண்டு இருப்பதால் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்