திருட்டு வழக்குகளில் தமிழக தம்பதி உள்பட 5 பேர் கைது பல கோடி ரூபாய் நகைகள் மீட்பு

பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தமிழக தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2020-11-06 02:11 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மத்திய மண்டலத்தில் உள்ள அசோக்நகர், விவேக்நகர், கப்பன்பார்க் போலீசார், நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி உள்பட 5 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. அந்த நகைகள் அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த நகைகளை, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.1½ கோடி நகைகள்

பெங்களூரு மத்திய மண்டலத்தில் உள்ள அசோக்நகர், விவேக்நகர், கப்பன்பார்க் போலீசார் நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக அசோக்நகர் போலீசார் சிக்கமகளூருவை சேர்ந்த் முகமது தவுபிக்(வயது 25) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தனது கூட்டாளியான அலீம் என்பவருடன் சேர்ந்து பெங்களூரு, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து நகைகள், பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார்.

கைதான தவுபிக்கிடம் இருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான 2 கிலோ 465 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1½ கோடி ஆகும். அலீமை போலீசார் தேடிவருகிறார்கள்.

27 வழக்குகளில் தீர்வு

இதுபோன்று, கப்பன்பார்க் அருகே எம்.ஜி.ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குமுத் ஜிஸ்வால்(22) என்பவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றினார். அவர் நகைக்கடையின் உரிமையாளருக்கு தெரியாமலும், தவறான கணக்கு காட்டியும், ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை, ஒடிசா மாநிலத்திற்கு சென்று கப்பன்பார்க் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுபோல, விவேக்நகர் போலீசார், நகரில் வீடுகளில் திருடிய பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த சேக் ஷா(34) என்பவரை கைது செய்து, ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

தமிழக தம்பதி

இதுபோல பெங்களூரு பைரதி பண்டே அருகே ஹரப்பனஹள்ளி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பாபு(வயது 33). இவரது மனைவி ஜெயந்தி என்ற ஜெயந்தி குட்டி(29). இவர்களது சொந்த ஊர் தமிழ்நாடு மதுரை ஆகும். பாபுவும், ஜெயந்தியும் கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசிக்கின்றனர்.

டிரைவரான பாபு, பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வந்தார். பகல் நேரத்தில் பாபு தனது மனைவி ஜெயந்தியுடன் பெங்களூரு நகரில் ஆட்டோவில் வலம் வருவார். அந்த சந்தர்ப்பத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளை கணவன், மனைவி இருவரும் நோட்டமிட்டு கொள்வார்கள். பின்னர் அந்த வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருடுவார்கள். அவர்களை தற்போது அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பாபு மற்றும் ஜெயந்தியிடம் இருந்து 1 கிலோ தங்க நகைகள், 5½ கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்