கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த பொதுமக்கள் - 39 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-06 14:18 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் உரிமை மற்றும் லஞ்ச ஒழிப்பு நுகர்வோர் பேரவையினர் மற்றும் எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சின்னசேலம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார்.

இந்த லஞ்ச பணத்தை அவர் திருப்பி வழங்க வேண்டும், மேலும் இலவச வீட்டு மனைப்பட்டா தருவதாக கூறி லஞ்சம் பெற்று கொண்டு இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வில்லை. அந்த பணத்தையும் அவர் திருப்பி வழங்க வேண்டும்.

தொடர்ந்து லஞ்சம் வாங்கி வரும் அவரை பணி நீக்கம் செய்யக்கோரியும், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து, அதனை லஞ்சமாக கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பேரவை மாநில தலைவர் ராம்நாத அடிகளார் உள்பட 39 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பொதுமக்கள் பிச்சை எடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்