அரக்கோணத்தில் பட்டப்பகலில் துணிகரம்: அ.ம.மு.க.பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2½ லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரக்கோணத்தில் பட்டப்பகலில் அ.ம.மு.க.பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகரம் நடந்துள்ளது.

Update: 2020-11-12 11:22 GMT
அரக்கோணம், 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பழனிபேட்டை, போல் நாயுடு தெருவை சேர்ந்தவர் எம்.சாந்தகுமார் (வயது 34). இவர் சென்னை ரெயில்வேயில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும், தனது நண்பருக்கு பணம் கொடுக்கவும் அரக்கோணம்- சோளிங்கர் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு நேற்று காரில் சென்றார்.

அவருடைய நண்பரான அரக்கோணம் திருமலை தெருவை சேர்ந்த ரெயில்வே ஒப்பந்ததாரர் வி.என்.சதீஷ் (26) மற்றொரு காரில் வங்கிக்கு சென்றார். அங்கு சாந்தகுமார் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்தை எடுத்து உள்ளார். இதில் சதீசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2½ லட்சத்தில் ரூ.2 லட்சத்தை வங்கியில் வைத்து சாந்தகுமார் கொடுத்துள்ளார். பின்னர் சாந்தகுமார் மீதமுள்ள ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்தை ஒரு கட்டை பையில் வைத்து கொண்டு அங்கிருந்து திருத்தணி வழியாக சென்னை செல்வதற்காக தனது காரில் புறப்பட்டார். அப்போது அவரிடம் நாகாலம்மன் நகரில் நடக்கும் தனது புதிய வீட்டின் பணிகளை பார்த்து விட்டு செல்லலாம் என்று சதீஷ் கூறவே இருவரும் தனித்தனி காரில் நாகாலம்மன் நகருக்கு சென்றுள்ளனர்.

அங்கு பணிகள் நடந்து வரும் வீட்டின் முன்பாக இருவரும் காரை நிறுத்தி உள்ளனர். சாந்தகுமார் தன்னிடம் இருந்த பணத்தில் மேலும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து சதீஷிடம் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்தை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சதீசுடன் வீட்டு வேலையை பார்க்க மாடிப்பகுதிக்கு சென்று உள்ளார்.

பின்னர் சாந்தகுமார் சென்னை செல்வதற்காக காரின் அருகே வந்துள்ளார். அப்போது காரின் இடதுபுறம் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் (பொறுப்பு), டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். சாந்தகுமார் பணம் எடுத்து சென்ற தனியார் வங்கியில் இருந்து சம்பவம் நடந்த பகுதி வரை உள்ள அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வங்கியில் சாந்தகுமார் பணம் எடுக்கும் போது மர்ம நபர்கள் அதை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா அல்லது காரை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் பட்ட பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்