ரகசிய கூட்டம் நடத்திய நிலையில் மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எடியூரப்பாவுக்கு நெருக்கடி

ரகசிய கூட்டம் நடத்திய நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்குமாறு வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Update: 2020-11-12 20:40 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து அதற்கு ஒப்புதல் பெற இருக்கிறார். இதையடுத்து மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

காங்கிரசில் இருந்து வந்து எம்.எல்.சி. பதவியை ஏற்றுள்ள எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், எச்.விஸ்வநாத் ஆகியோரும் தங்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களில் எச்.விஸ்வநாத் தவிர மற்ற 2 பேருக்கு மந்திரி பதவி கிடைக் கும் என்று சொல்லப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு அழுத்தம்

இதற்கிடையே அவர்கள் சட்டசபை உறுப்பினர்களாக இருந்தபோது தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் மந்திரி பதவி ஏற்க தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்கள் மந்திரி பதவி ஏற்றாலும், அது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அவர்கள் மந்திரிகள் ஆனாலும், அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மக்கள் மூலம் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

ஆனால் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்-சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமனம் மூலம் எச்.விஸ்வநாத்துக்கு எம்.எல்.சி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னொருபுறம், பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, ராஜூகவுடா, சங்கர் பட்டீல், பூர்ணிமா சீனிவாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வீட்டில் மதிய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை நடத்தினர். அப்போது மந்திரி பதவிக்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர்.

சிக்கலை ஏற்படுத்த முயற்சி

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் நேற்று அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கூடிய சீக்கிரம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யுமாறும், அப்போது தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் தோற்றவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

மந்திரிசபையில் இருப்பது 7 இடங்கள் மட்டுமே. ஆனால் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்கள் அந்த பதவிக்கு போட்டி போடுகிறார்கள். அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, பதவி கிடைக்காதவர்கள், எடியூரப்பாவுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்