கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-11-13 21:58 GMT
புதுச்சேரி, 

தீபங்களின் திருவிழாவாகிய தீபாவளி இந்திய மக்களால் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களாலும் கொண்டாடப்படுகிறது. இது தீமைக்கு எதிரான தர்மத்தின் வெற்றியை குறிக்கிறது. நல்வினைகளால் நம் வாழ்க்கை ஒளிபெறுவதை தீபாவளி உணர்த்துகிறது.

இந்த தீபாவளி நம் வாழ்வின் பாதையை ஒளிர செய்து மக்களின் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டுவரட்டும். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் புதுச்சேரி மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பண்டிகையை பசுமையான மற்றும் கொரோனா பரப்பாத தீபாவளியாக பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாராயணசாமி

முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாள் நாம் அனைவரும் கொண்டாடி மகிழும் அற்புதமான திருநாளாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாடையுடுத்தி, இனிப்புகளோடு கொண்டாடும் திருநாள் தீபாவளியாகும். நம் முன்னோர்கள் குடும்ப ஒற்றுமையை பேணவும், உற்றார், உறவினர் அக்கம் பக்கத்தினர் ஆகியோருடன் நல்லுறவை மேம்படுத்தவும் விழாக்களையும், பண்டிகைகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

அதற்கேற்றாற்போல் நாமும், நம் குடும்ப உறவுகள், உறவினர், நண்பர்கள் என அனைத்து தரப்பினரிடமும், பகை மறந்து, கருத்து வேறுபாடுகள் கடந்து இந்த திருநாளை அவர்களோடு இணைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடிட வேண்டும். இந்த தீபாவளி திருநாளில் புதுச்சேரி மாநில அனைத்து தரப்பு மக்களும் தங்கள் உற்றார்- உறவினரோடு புத்தாடை மற்றும் இனிப்புகளோடு மகிழ்ச்சியாய் பண்டிகையை கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விதிகளை கடைப்பிடியங்கள்

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காற்று மற்றும் ஒலி மாசில்லாமல் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்பது என் விருப்பமாகும். தற்போது கொரோனா சிறிது குறைந்துள்ள நிலையில் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து தொற்று நோய் பரவாமல் இருக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்