தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றுத்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றுத்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-11-17 23:43 GMT
புதுச்சேரி, 

கடந்த காலத்தில் புதுவையில் மருத்துவ கல்லூரிகளாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திக்கொண்டு மாநிலத்துக்கான இடங்களை 2017-ம் ஆண்டில் இருந்து கொடுக்கவில்லை. மீதமுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து 35 சதவீதத்துக்கும்கீழ் இடங்களைத்தான் புதுவை அரசு ஏதோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் பெற்றுக்கொண்டு அந்த இடங்களுக்கான சேர்க்கையை நடத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்

பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் அவை சிறுபான்மையினர் அல்லது எந்த கல்லூரியாக இருந்தாலும் 50 சதவீத இடங்களை அந்தந்த மாநிலங்களுக்கு கட்டாயம் வழங்கவேண்டும் என்று ஒரு புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கி கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் புதுவை அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்ததை நிறைவேற்ற காலம்தாழ்த்தி ஜூன் மாதம் சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவை அறிமுகப்படுத்தி கவர்னர் வழியாக மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.

கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டும்

எனவே புதுவை அரசு கொண்டு வந்துள்ள சட்ட முன்வடிவினையும், பிரதமர் கொண்டுவந்துள்ள சட்டத்தினையும் இணைத்து இந்த ஆண்டே தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொழி சிறுபான்மையினர் மற்றும் இன சிறுபான்மையினர் மருத்துவ கல்லூரிகளிலும் 50 சதவீத இடங்களை பெற்றுத்தான் மருத்துவ கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வினை நடத்த வேண்டும். அதுவரை மருத்துவ கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வினை தள்ளிவைக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்