தென்காசியில் ஏ.டி.எம்-ல் இளம்பெண் தவறவிட்ட தங்கச்சங்கிலி மீட்பு - போலீசார் நடவடிக்கை

தென்காசியில் வங்கி ஏ.டி.எம்.-ல் இளம்பெண் தவறவிட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி, போலீசாரின் தொடர் நடவடிக்கையால் மீட்கப்பட்டது.

Update: 2020-11-19 09:15 GMT
தென்காசி,

தென்காசி செய்யது குருக் கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் ஓசூரில் ஒரு பலசரக்கு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், இவருடைய மனைவி சுல்தான் பீவி (வயது 30) என்பவரும் கடந்த 7-ந் தேதி தென்காசி-நெல்லை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்தனர்.

அப்போது சுல்தான் பீவி ஒரு பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி வைத்திருந்தார். பணம் எடுத்து விட்டு அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த தங்கச்சங்கிலியை காணவில்லை.

பின்னர் 2 பேரும் ஏ.டி.எம். -ல் வந்து பார்த்துள்ளனர். அங்கும் சங்கிலி இல்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தென்காசி போலீசில் புகார் செய்தனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தினார். வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவினை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுல்தான் பீவி வந்துவிட்டு சென்றபிறகு அங்கு இளைஞர்கள் 2 பேர் வந்து பணம் எடுத்ததும், அப்போது அவர்கள் கீழே கிடந்த தங்க சங்கிலியை எடுத்து அதில் ஒருவர் தனது பையில் வைப்பதும் பதிவாகியிருந்தது.

இதன் பிறகு போலீசார் அந்த இளைஞர்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். கார்டின் எண்ணை எடுத்து வங்கியில் கொடுத்தனர். வங்கியில் இருந்து அதனை மும்பைக்கு அனுப்பி வைத்து அதற்கு உரிய வங்கி கணக்கு எங்கு உள்ளது? என்று ஆய்வு செய்தனர். அப்போது அது தென்காசியில் உள்ள ஒரு வங்கியின் கணக்கு என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்த சபரி (24) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகையை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்டு உடனடியாக நகையை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதன்பிறகு புகார் செய்த சுல்தான் பீவி மற்றும் அவரது கணவரை தென்காசி போலீஸ் நிலையத்திற்கு நேற்று போலீசார் வரவழைத்தனர். சுல்தான் பீவியிடம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அந்த நகையை ஒப்படைத்தார்.

போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இளம்பெண் தவறவிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மீட்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை, இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவன், முத்துராஜ் மற்றும் போலீசார் பாராட்டினர்.

மேலும் செய்திகள்