வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2020-11-19 19:47 GMT
கோவில்பட்டி, 


திரையரங்குகளுக்கான உரிமை கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை மாற்றி, உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வி.பி.எப். கட்டணத்தை திரைப்பட தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம் என்றும், அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இது அரசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை என்றாலும்கூட, க்யூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் அமர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தினோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை வெளியிட தடையில்லை என்ற சூழ்நிலை உள்ளது.

அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற மாநில கட்சிகளின் தலைமையிடம் தமிழகத்திலேயே உள்ளது. ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் தலைமையிடம் இங்கு கிடையாது. எனவே அக்கட்சிகளின் தலைவர்கள் வரும்போது, அக்கட்சியினர் வரவேற்பார்கள்.

மத்திய உள்துறை மந்திரி என்ற வகையில் அமித்ஷா தமிழகத்துக்கு வரும்போது, அவரை வரவேற்போம். அவரின் வருகையால், எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினை என்று பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் கூறுவது, அவரது சொந்த கருத்து.

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். தேசிய கட்சிகளின் தலைமையில் ஒருபோதும் கூட்டணி அமைந்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்