கொட்டித்தீர்த்த கனமழை: கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்

கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக, வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கயிறு கட்டி ஆபத்தான நிலையில் மலைக்கிராம மக்கள் ஆற்றை கடக்கின்றனர்.

Update: 2020-11-20 04:47 GMT
பெரும்பாறை, 

கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை அருகே கல்லக்கிணறு கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் 300 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்காக கல்லக்கிணறு ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து தான் பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு செல்ல வேண்டும். மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.

அதன்படி தற்போது பெரும்பாறை பகுதியில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் கல்லக்கிணறு ஆற்றில் தண்ணீரை கரைபுரண்டு ஓடுகிறது. எனவே அந்த ஆற்றை கடக்க முடியாமல் மலைக்கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் அன்றாட தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இருபுறத்திலும் உள்ள மரங்களில் கயிறு கட்டி ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் அவலநிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறிது கவனம் சிதறினாலும் ஆற்றில் அடித்து செல்லும் சூழல் நிலவுகிறது. எனவே மலைக்கிராம மக்களின் நலன் கருதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி அருகே மாட்டுப்பாதை, ராமபட்டினம்புதூர், பெரியபாலம், கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகள் உள்ளன. கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக மாட்டுப்பாதை ரெயில்வே சுரங்கபாதையில் 6 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், அதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்