மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பெற்றோருக்கு ஆலோசனை - பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பெற்றோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-11-21 03:41 GMT
கடலூர்,

பள்ளிக்கல்வித்துறை மூலம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க ஆய்வு மேற்கொண்டு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் இடைநிற்றலால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகள் குறித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் நிலை குறித்தும் ஆலோசனைகள் வழங்கி மாணவர்களின் கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும். பெண் குழந்தைகளின் இடைநிற்றலையும் கட்டாயம் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு கல்வி இடைநிற்றல் வாழ்வாதார பிரச்சினைகள் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தினை அமைத்துத்தர அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும்.

அரசு பள்ளிகளிலும் போதிய அளவுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இனி வருங்காலங்களில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களும் அதிக அளவில் ஈடுபாட்டுடன் மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் சிந்தனைகளை வளர்த்து, கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டும்.

பள்ளி திறப்பதற்கு முன்பே அனைத்து பள்ளிகளிலும் உரிய இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகிய அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, சரியான நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கொரோனா நோய் தொற்று ஏற்படாவண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்