விவசாயத்தில் தொடர் நஷ்டம்: திருச்சியில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து திருச்சியில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-22 10:55 GMT
ஸ்ரீரங்கம், 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகன் ரமேஷ்பாபு (45). இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளது. செல்லம்மாளின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

விவசாயத்தில் ஆர்வம் கொண்ட தாயும், மகனும் நச்சலூரில் தங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் அவை அழிந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

ரூ.50 லட்சம் கடன்

இவர்கள் விவசாயத்திற்காக பல இடங்களில் கடன் பெற்று உள்ளனர். ரூ.50 லட்சம் வரை கடன் இருப்பதாக கூறப்படுகிறது. கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியாமல் திணறினர். எனவே, சொந்த இடம், வீடு ஆகியவற்றை அடமானம் வைத்தும் சிலவற்றை விற்பனை செய்தும் கடனை அடைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இருப்பினும் கடன் விடாது துரத்தியபடியே வந்தது. இதனால் அங்கிருந்து குடிபெயர்ந்து திருச்சி திருவானைக்காவல் கணபதி நகருக்கு வந்து வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தனர். பின்னர் கொண்டையம்பேட்டையில் 3 ஏக்கர் இடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை, நெல் பயிர் செய்தனர்.

மழையால்நெல், வாழை நாசம்

வாழை சாகுபடி செய்து அவை அறுவடை செய்யும் வேளையில் கொரோனா ஊரடங்கால் வாழை விலையின்றி காய்கள் மரத்திலேயே பழுத்து அழுகி நாசமானது. ஆனாலும், அவர்களுக்கு விவசாயத்தை கைவிட மனமில்லை. தொடர்ந்து வாழை, நெல் பயிர் செய்தனர்.

இந்தநிலையில் திருச்சியில் சமீபத்தில் 2 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இந்த மழையால் வாழை மற்றும் நெல் பயிர்களில் தண்ணீர் தேங்கி நாசமானதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்துதற்கொலை

இதனால் தாயும், மகனும் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். நேற்று காலை அவர்களது வீட்டு முன்பு பால்காரர் போட்டு சென்ற பால் பாக்கெட் நீண்ட நேரமாக எடுக்கப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. இதனால், கீழ் வீட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் சபாபதி மாடிக்கு சென்று கதவை தட்டினார்.

ஆனால், கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தபோது செல்லம்மாளும், ரமேஷ்பாபுவும் வாயில் நுரை தள்ளியபடி தரையில் பிணமாக கிடந்தனர். அருகில் பூச்சிமருந்து பாட்டில் கிடந்தது. எனவே, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பூட்டிய வீட்டை உடைத்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு குழந்தையுடன் சென்றிருந்த ரமேஷ்பாபுவின் மனைவிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய், மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்