திருச்சி விமான நிலையத்தில் 120 பவுன் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் 120 பவுன் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-11-22 11:23 GMT
செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இயக்கப்படும் இந்த விமானங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 7.55 மணிக்கு தோகாவில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக 56 தமிழர்கள்திருச்சிக்கு சிறப்பு மீட்பு விமானத்தில் வந்தனர். இதைத்தொடர்ந்து இரவு 8.55 மணிக்கு சிறப்பு விமானத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

120 பவுன் தங்கம் கடத்தல்

அப்போது, 2 பயணிகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களை தனியாக அழைத்துச்சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சேட்டு(வயது 38) என்ற பயணி, தனது பேன்ட் பாக்கேட்டில் பசை வடிவில் 800 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புதுக்கோட்டையை சேர்ந்த ஹமீது என்ற பயணி 166.5 கிராம் தங்கத்தை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரிடம் இருந்தும் சுமார் 120 பவுன் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

மேலும் செய்திகள்