சிவகாசியில் ரூ.3½ கோடி செலவில் நவீன வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

சிவகாசியில் ரூ.3½ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

Update: 2020-11-22 13:57 GMT
சிவகாசி, 

சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.) செயல்பட்டு வந்தது. தனியார் கட்டிடத்தில் இருந்த இந்த அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லாமல் அதிகாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி “தினத்தந்தி“ யில் வெளியானது.

பின்னர் சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி எடுத்தார். சிவகாசி அருகே உள்ள ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்த அரசு இடத்தில் 4½ ஏக்கர் பரப்பில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இதற்கு தேவையான ரூ.3½ கோடி நிதியை அரசிடம் இருந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெற்று கொடுத்தார். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டுமான பணி தொடங்கியது.

பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடத்த அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இதை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார். பின்னர் திறப்பு விழாவுக்காக காத்திருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி விருதுநகருக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய ஆர்.டி.ஓ. அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடக்கவிழா

இந்த நிலையில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மூக்கன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் திருத்தங்கல் சீனிவாசன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், திருத்தங்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.செல்வம், தொகுதி கருப்பசாமிபாண்டியன், பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்