தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

Update: 2020-11-22 18:21 GMT
மயிலாடுதுறை,

திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களும் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் திமுக தொண்டர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் போலீசார் உதயநிதியை கைது செய்து அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இரவு 10 மணி ஆகியும் உதயநிதியை போலீசார் விடுதலை செய்யவில்லை என திமுகவினர் ஒன்றுதிரண்டு உதயநிதியை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். வேறு இடத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்ததால் 6 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையும் தேர்தல் பிரச்சாரத்தை தொடருவேன். அமித்ஷா சாலையில் இறங்கி செல்கிறார். கூட்டம் கூடுகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது அரசின் நிகழ்ச்சி என்கிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் தான் அரசியல் பேசி இருக்கிறார்கள். கூட்டணியை அறிவித்துள்ளனர். அதிமுகவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்