சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை

சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி அளித்த வாக்குமூலத்தின்படி, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்தார்.

Update: 2020-11-24 23:35 GMT
பெரம்பூர்,

சென்னை சவுகார்பேட்டையில் நிதிநிறுவன அதிபர் தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகிய 3 பேர் கடந்த 11-ந்தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர்களும், அவரது மைத்துனர்களுமான கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் கைதான கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டெல்லி ஆக்ராவில் பதுங்கி தலைமறைவாக இருந்த ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, விலாஸ், கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகிய 3 பேரையும் கைது செய்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இக்கொலை குற்றத்துக்கு துப்பாக்கி கொடுத்த உதவியதாக கைலாஷின் நண்பரான ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ்துப்பேரிடம் யானைக்கவுனி போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசில் வாக்குமூலம்

அதில், இவருக்கு சொந்தமான உரிமம் உடைய துப்பாக்கியை சட்டவிரோதமாக கைலாஷுக்கு கொடுத்து கொலைக்கு உதவியதால், ராஜீவ்துப்பேரை நேற்று முன்தினம் யானைக்கவுனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஜெயமாலா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 5 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும், சம்பவத்தன்று மாமனார் தலில்சந்து, மாமியார் புஷ்பாபாய் மற்றும் கணவர் ஷீத்தல் குமார் மட்டும் இருந்ததால் அவர்களை கொன்றதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாமனாரின் உறவினர்களான 2 பேரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அவர்கள் தப்பி விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப் படையில், யானைக்கவுனி போலீசார் மாமனார் தலில்சந்த் சகோதரர் மகன் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு ஒஸ்வால் கார்டன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த விஜயகுமார் ஜெயின் (45) என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

நிதி நிறுவன அதிபர் தற்கொலை

நிதி நிறுவனம் நடத்திவந்த அவரை, நேற்று முன்தினம் போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர், நேற்று காலை 7 மணிக்கு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பெரியப்பா மகன் ரமேஷ் என்பவர் வசிக்கும் ‘கியூ’ பிளாக்கில் உள்ள 3-வது மாடியில் இருந்து குதித்தார்.

இந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், உயிருக்கும் போராடிய நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவலை அறிந்த ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் ஜெயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்