அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-11-25 09:47 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம்

இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும், அதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றவர் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாகனம் பெறுவதற்கான மொத்த தொகையில் அரசு மானியம் ரூ.25 ஆயிரம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் அரசு மானியம் ரூ.31 ஆயிரத்து 250 போக மீதி தொகையினை செலுத்த விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்துடன் வயது வரம்பிற்கான சான்று, இருப்பிட சான்று, தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் நகல் அல்லது பழகுனர் ஓட்டுனர் உரிமம் நகல், வேலை கொடுக்கும் அதிகாரி அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட வருட வருமான சான்று, பணிபுரிவதற்கான அத்தாட்சி, ஆதார் கார்டு, கல்விசான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச்சான்று, பயனாளிகள் பெற விரும்பும் இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் மேற்கண்டன ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்